மருத்துவர் அய்யாவை மேலும் இரு வழக்குகளில் கைது செய்ய சதி - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை
மரக்காணம் கலவரத்தில் அப்பாவி வன்னியர்கள் இருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்டதற்காகவும், நூற்றுக்கணக்கான வன்னிய இளைஞர்கள் அடித்து காயப்படுத்தப் பட்டதற்காகவும் நீதி கேட்டு போராட்டம் நடத்தச் சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மருத்துவர் அய்யா அவர்களின் பிணை மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அம்மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.
இதனிடையே, மாமல்லபுரத்தில் இந்தாண்டு நடைபெற்ற வன்னிய இளைஞர் பெருவிழா தொடர்பான ஒரு வழக்கிலும், கடந்த ஆண்டு விழா தொடர்பான இன்னொரு வழக்கிலும் மருத்துவர் அய்யா அவர்களை கைது செய்வதற்கான பிடி ஆணைகளை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் மாமல்லபுரம் காவல்நிலைய ஆய்வாளர் சாரதி திடீரென பெற்றுள்ளார். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவரும், பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவருமான ஜெ.குரு, பா.ம.க. துணைப்பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோருக்கு எதிராகவும் இந்த இரு வழக்குகளிலும் பிடி ஆணைகளை காவல்துறையினர் பெற்றுள்ளனர்.
நீதி கேட்டு போராட்டம் நடத்திய வழக்கில் மருத்துவர் அய்யாவுக்கு பிணை கிடைத்தாலும் அவர் சிறையிலிருந்து விடுதலையாகிவிடக் கூடாது என்ற குரூர எண்ணத்தில், பழைய வழக்குகளை தோண்டி எடுத்து அவற்றில் அவரை கைது செய்ய அ.தி.மு.க. அரசு சதி செய்கிறது.
கடந்தாண்டு மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு விழா தொடர்பான வழக்கு 05.05.2012 அன்று பதிவு செய்யப்பட்ட போதிலும் அதன் குற்றப்பத்திரிக்கை ஆறு மாத தாமதத்திற்குப் பிறகு 09.11.2012 அன்று தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகும் அடுத்த ஆறு மாதங்களாக இந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், இப்போது திடீரென கைது செய்வதன் மூலம் மருத்துவர் அய்யா மீதும், பாட்டாளி மக்கள் கட்சியின் மற்ற தலைவர்கள் மீதும் எத்தகைய கொடூரமான பழி வாங்கும் போக்கை முதலமைச்சர் ஜெயலலிதா கடைபிடித்து வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு சமூகத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கேட்டு போராடி வருவதற்காக மருத்துவர் அய்யாவை அரசு பழி வாங்குவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பழி வாங்கும் போக்கை கடைபிடித்த ஆட்சியாளர்கள் அனைவரையும் தேர்தல்களில் பொதுமக்கள் பழி வாங்கியிருக்கின்றனர் என்பது தான் கடந்த கால வரலாறு ஆகும். இந்த வரலாறு தெரியாமல் செயல்படுபவர்களை வரும் தேர்தலில் தண்டிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர்.எனவே, மருத்துவர் அய்யாவையும், மற்ற பா.ம.க. தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் ஆணையிட வேண்டும்.
மருத்துவர் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிலவும் சூழலை பயன்படுத்தி, தமிழகத்தில் சிறு தவறு நடந்தாலும் அதற்கு நாம் தான் காரணம் என்று பழி போட ஆட்சியாளர்களும், நமது எதிரிகளும் திட்டமிட்டிருக்கின்றனர். எனவே, பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அறவழியில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment