பாமக தலைமை நிலையம் 04.05.2013 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடுநிலை தவறாமல், அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய தமிழக அரசு, மரக்காணம் வன்முறை கும்பலுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட பாட்டாளிகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் தான் அரசின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.
மரக்காணம் கலவரத்தில் 2 வன்னியர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு விழுப்புரத்தில் போராட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மற்றும் 300&க்கும் மேற்பட்ட தொண்டர்களை கைது செய்த காவல்துறை அவர்களை திருச்சி மத்திய சிறையில் மிகவும் அவலமான சூழலில் அடைத்து வைத்திருக்கிறது.
அவர்களின் பிணை மனுக்களை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம், அனைவரையும் பிணையில் விடுதலை செய்து நேற்று ஆணையிட்டது. விழுப்புரம் வழக்கு என்பது தடையை மீறி போராட்டம் நடத்திவிடக் கூடாது என்பதற்காக ராமதாஸ் உள்ளிட்டோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது தொடர்பானது ஆகும். கைது செய்யப்பட்ட எவரும், எந்த குற்றமும் செய்யாதவர்கள் ஆவர். இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு தான் அனைவருக்கும் பிணை வழங்கியுள்ளது.
மிகமிக சாதாரணமான இந்த வழக்கில் கூட ராமதாசுக்கு பிணை வழங்கப்பட்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அதற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. பொதுவாக இதுபோன்ற அரசியல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவிப்பதற்கு முன்பாக அரசே விடுதலை செய்வது தான் வழக்கம் ஆகும்.
ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சி மீது ஆளுங்கட்சி எவ்வளவு காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கிறது என்பது அம்பலமாகும். அதுமட்டுமின்றி, இந்த வழக்கில் மருத்துவர் அய்யா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பிணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டதாக இந்த வழக்கை கையாளும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வாய்மொழியாக தகவல் அளித்ததால் 300&க்கும் மேற்பட்டோர் நேற்று பிணையில் விடுதலை ஆக முடியவில்லை. பா.ம.க.வினர் விடுதலை ஆவதைத் தடுக்க காவல்துறை எத்தகைய மோசடிகளை கையாளுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
மேலும் ராமதாஸ் விடுதலையாவதை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்பதற்காக பழைய வழக்குகளை எல்லாம் தூசு தட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது அரசு. ஏற்கனவே மாமல்லபுரம் மாநாடு தொடர்பான 2 வழக்குகளில் ராமதாசை கைது செய்துள்ள தமிழக அரசு, இப்போது மதுரை வழக்கு ஒன்றிலும், கூடங்குளம் அணு உலையை எதிராக பேசிய வழக்கு ஒன்றிலும் மருத்துவர் அய்யாவை கைது செய்ய ஆணை பெற்றுள்ளது. இவற்றில் மதுரை வழக்கு 9 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்டதாகும். இதுவரை அந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, ராமதாசை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற வழக்குகளை தூசு தட்டி எடுத்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் கண்டிக்கத் தக்கவை.
ஒருபுறம் பா.ம.க.வினருக்கு எதிராக இவ்வளவு வேகம் காட்டும் தமிழக அரசு, மரக்காணம் கலவரத்தில் அரியலூரைச் சேர்ந்த பா.ம.க. தொண்டர் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறு ஆய்வில் உறுதி செய்யப்பட்டு விட்ட போதிலும், அதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளைப் பற்றிய துப்புகள் கிடைத்துள்ள போதிலும், அவர்களை கைது செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதிலிருந்தே அரசின் ஒருதலைபட்சமான செயல்பாடு அம்பலமாகிறது. இதையெல்லாம் கண்டு வெறுப்படைந்துள்ள தமிழக மக்கள் வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment