பா.ம.க.வினர் மீது பழிபோட்டு விற்பனை பணத்தை கையாடல் செய்ய மதுக்கடைக்கு தீவைத்த ஊழியர்கள் போலீஸ் விசாரணையில் சிக்கினர்
போளூர்,
பா.ம.க. போராட்டத்தை காரணமாக வைத்து விற்பனை பணத்தை கையாடல் செய்வதற்காக மதுக்கடைக்கு தீ வைத்த 2 ஊழியர்கள் போலீஸ் விசாரணையில் சிக்கினர்.
மதுக்கடையில் தீ
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரசு பஸ்களுக்கு தீ வைப்பு, மதுக் கடைகளுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கரைப்பூண்டியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று முன்தினம் காலையில் இந்த கடையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதில் கடையில் இருந்த மேஜை, நாற்காலிகள் எரிந்துவிட்டதாக டாஸ்மாக் உதவி மேலாளர் ஏழுமலை போளூர் போலீசில் புகார் செய்தார்.
பணத்தை கையாடல் செய்ய
கலசபாக்கம் போலீசார் அந்த கடையை திறந்து பார்த்தபோது தீ எரிந்து கொண்டிருந்தது. அதனால் சிறிது நேரத்திற்கு முன்பு தான் தீ வைக்கப்பட்டுள்ளது என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சக்கரவர்த்தி, விற்பனையாளர் பழனி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மது விற்ற பணம் ரூ.52 ஆயிரத்தை கையாடல் செய்வதற்காக அவர்களே மதுக்கடைக்கு தீ வைத்ததை ஒப்புக் கொண்டனர்.
2 பேரும் கைது
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களை கைது செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சக்கரவர்த்தி, விற்பனையாளர் பழனி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
SOURCE LINK: http://www.dailythanthi.com/node/269149
No comments:
Post a Comment