Friday, May 3, 2013

கலைஞர், வைகோவை கைது செய்ததைபோல பழிவாங்க ஜெயலலிதா எந்த எல்லைக்கும் செல்வார்: பாமக தலைமை கண்டனம்

கலைஞர், வைகோவை கைது செய்ததைபோல பழிவாங்க ஜெயலலிதா எந்த எல்லைக்கும் செல்வார்: பாமக தலைமை கண்டனம்

பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

செய்யாத குற்றத்திற்காக பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இராமதாசு அவர்கள் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசியல் பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாமல்லபுரத்தில் கடந்த 05.05.2012 அன்று நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா தொடர்பான வழக்கில் அவரை கைது செய்திருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது. காவல்துறையினரால் சுமத்தப்பட்டுள்ள எந்தக் குற்றத்தையும் மருத்துவர் அன்புமணி இராமதாசு செய்யாத நிலையில் அவரை பழி வாங்கும் நோக்குடன் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசு, அடுத்த கட்டமாக மருத்துவர் அன்புமணி இராமதாசையும் கைது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக எப்போதோ தொடரப்பட்ட பொய் வழக்கை தூசு தட்டி எடுத்திருக்கிறது. மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஓராண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அந்த வழக்கில் இப்போது திடீரென பிடியாணை பெற்று கைது செய்திருப்பதில் இருந்தே தமிழக அரசின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

மருத்துவர் அய்யா மற்றும் பா.ம.க. மூத்த தலைவர்களை கைது செய்து 16 மணி நேரத்திற்கும் மேலாக அலைக்கழித்து, திருச்சி சிறையின் பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து கொடுமைப் படுத்தி வருவதுடன், இப்போது மருத்துவர் அன்புமணி இராமதாசையும் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதன் மூலம் தமிழக அரசின் பழிவாங்கல் எல்லை தாண்டியிருக்கிறது.

பழிவாங்கல் என்பது முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை புதிதல்ல. மனிதாபிமானமற்ற, அரசியல் நாகரீகமற்ற, சர்வாதிகாரமான முறையிலும், கர்வத்துடனும் செயல்பட்டு தனக்கு பிடிக்காதவர்களை பழி வாங்குவது தான் அவரது வழக்கம். பிடிக்கவில்லை என்பதற்காக தமது சகோதரர் ஜெயக்குமாரின் இறுதிச் சடங்குகளிலேயே கலந்து கொள்ளாமல் அவமானப்படுத்தியவர் தான் ஜெயலலிதா. ஸ்பிக் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் விவகாரத்தில் தமது பரிந்துரையை எதிர்த்ததற்காக, ஒரு காலத்தில் தமது தோழியாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீது அமிலம் வீசி கொலை செய்வதற்கு நடந்த முயற்சியின் பின்னனியில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர் தான் இவர். தமக்கு எதிராக செயல்பட்டதற்காக வழக்கறிஞர்கள் கே.எம். விஜயன், சண்முக சுந்தரம் ஆகியோர் தாக்கப்பட்டது, ஒரு வழக்கில் நீதியை காப்பாற்ற முயன்றதற்காக உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் மீதும், தமக்கு எதிராக செயல்பட்டதற்காக எம்.ஜி.ஆரின் ஓட்டுனர் முத்து மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்தது, கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்து வைத்த வளர்ப்பு மகன் சுதாகரன் எதிரியாக மாறியதும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்தது, ஒரு காலத்தில் தமது பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரணை பொய் வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தது என ஜெயலலிதாவின் பழி வாங்கலுக்கு எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம்.

இதற்கெல்லாம் மேலாக 80 வயதைக் கடந்த தி.மு.க. தலைவர் கலைஞரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தது, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தில் கைது செய்து 20 மாதங்கள் சிறையில் அடைத்தது போன்றவை தமது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு உதாரணங்கள் ஆகும்.

அதேபோல் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆகியோரை பழி வாங்கும் படலத்தை முதலமைச்சர் தொடங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் மக்கள் நலன் காக்கும் மகத்தான தலைவராக திகழும் மருத்துவர் அய்யா அவர்கள்,அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரூ. 20 ஆயிரம் கோடிக்கு வரி மற்றும் கட்டண உயர்வுகளை அறிவித்தது, 18 மணி நேரம் வரை மின்வெட்டை நடைமுறைப் படுத்தியது, முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை மாற்றியது , சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிட முயன்றது, தெருக்கள் தோறும் மதுக்கடைகளை திறந்து மக்களை சீரழிப்பது போன்ற அரசின் தவறுகளை மக்களிடம் அம்பலப்படுத்தியதால் மருத்துவர் அய்யா மீது ஆட்சியாளர்கள் கடுமையான கோபம் கொண்டிருந்தனர். மாமல்லபுரம் மாநாட்டில் பல லட்சம் பேர் திரண்டது, இனி வரும் தேர்தல்களில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்தது ஆகியவற்றால் வரும் தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றிவாய்ப்பை பா.ம.க. பறித்து விடும் என்ற ஆற்றாமையில் தான் பா.ம.க.வை முடக்கும் நோக்கத்துடன் மருத்துவர் அய்யாவையும், மருத்துவர் அன்புமணி இராமதாசையும் தமிழக அரசு அடுத்தடுத்து பொய் வழக்குகளில் கைது செய்திருக்கிறது.

கடந்த காலங்களில் பல்வேறு அடக்கு முறைகளை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி இத்தகைய அடக்கு முறைகளுக்கு அஞ்சாது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படும் வரையிலும், மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆணையிடப்படும் வரையிலும் பா.ம.க.வின் அறவழியிலான, அமைதிப் போராட்டம் தொடரும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைநிலையம் அறிவிக்கிறது.

இவ்வாறு பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment