2004ம் ஆண்டு மதுரையில் ரஜினி ரசிகர்களை பாமகவினர் தாக்கிய வழக்கில் தலைமறைவு குற்றவாளி என கூறி ராமதாஸ் கைது போலீசார், மீண்டும் கைது செய்துள்ளனர்.
பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிகரெட் பிடித்து நடித்தது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் 2004ம் ஆண்டு தெரிவித்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், 2004ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ராமதாஸ் மதுரை வந்தார். நெல்பேட்டை பகுதியில் ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் கருப்பு கொடி காட்டினர். இதை தடுத்த பாமகவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த வக்கீல் மணவாளன் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 11 பேர் மீது விளக்குத்தூண் போலீ சார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு மதுரை ஜேஎம் 1 கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸ், இளஞ்செழியன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் ராமதாசுக்கு ஏற்கனவே கோர்ட் வாரன்ட் பிறப்பித்து இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இளஞ்செழியன் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.
தற்போது ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை தாக்குதல் வழக்கிலும் அவரை கைது செய்யும் வகையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கும்படி போலீசார் மதுரை ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ரவி முன்பு நேற்று மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், ராமதாசை கைது செய்யும் பிடிவாரன்டை பிறப்பித்தார்.
இதை போலீசார் பேக்ஸ் மற்றும் இமெயில் மூலம் திருச்சி சிறைக்கு அனுப்பியதால் நேற்றிரவே ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் ஜாமீன் கிடைத்தும் ராமதாஸ் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராமதாசை இன்று மதுரைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
போலீஸ் எதிர்ப்பு
இதனிடையே ராமதாசுக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, நீதிபதி சத்யநாராயணன் முன்பு ஆஜராகி முறையிட்டார். அப்போது, பாமகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குவது, பாலத்தின் அடியில் குண்டு வைத்தது, மரங்களை வெட்டி சாய்த்தது போன்ற செயல்களில் பாமகவினர் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஜாமின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சோமையாஜி வாதிட்டார். இதையடுத்து, ஜாமின் ஆவணங்களை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யுமாறு விழுப்புரம் நடுவர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment