Sunday, April 28, 2013

மரக்காணம் கலவரம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன: ராமதாஸ்

மரக்காணம் கலவரம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

மாமல்லபுரத்தில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மீது கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மரக்காணத்தில் திட்டமிட்டு மிகக்கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலில் கும்பகோணம் விவேக், அரியலூர் செல்வராஜ் என்ற இரு அப்பாவி வன்னிய இளைஞர்கள் வெட்டியும், அடித்தும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரையும் படுகொலை செய்தது விடுதலை சிறுத்தைகள் கும்பல் தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி கோரியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
மரக்காணம் கலவரம் தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாகஉள்ளன. சாதிவெறி வன்முறை கும்பல்திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் ஒரு சிலர் மட்டுமே காயமடைந்ததாக கருதப்பட்டது. ஆனால், நூற்றுக்கணக்கான அப்பாவி வன்னியர்களை வன்முறைக் கும்பல் அடித்தும், வெட்டியும் காயப்படுத்தியிருப்பதாகவும், உயிருக்கு பயந்து தப்பிச் சென்ற அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்றுள்ளனர் என்று தகவல் கிடைத்திருக்கிறது. மரக்காணம் கலவரம் உள்ளூர் அளவில் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் வகுத்துக் கொடுத்த வன்முறைத் திட்டத்தின் அடிப்படையில் தான் அப்பாவிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் திட்டமிட்டு மற்ற சமுதாயத்தினரை தாக்குதல், பின்னர் தங்களது வீடுகளை தாங்களே தாக்கிக்கொண்டு இழப்பீடு பெறுதல் போன்ற செயல்களை அனுமதிப்பதும், இவர்களை திருப்தி படுத்துவதற்காக மற்ற சமுதாயங்களைச் சேர்ந்த அப்பாவிகள் மீது பொய்வழக்குப் போட்டு கைது செய்வதும் தொடர்ந்தால் தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும். எனவே, மரக்காணம் கலவரத்தில் அப்பாவிகள் இருவரை படுகொலை செய்ததுடன் நூற்றுக்கணக்கானோரை காயப்படுத்தியும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியும் வன்முறை வெறியாட்டம் நடத்திய கும்பல் மீதும், அதற்கு சதித் திட்டம் வகுத்துத் தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும்; இக்கலவரத்தின் பின்னணி மற்றும் இதற்கு ஆதரவாக இருந்தவர்களை அடையாளம் காண்பதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரத்தில் எனது தலைமையில் மிகப்பெரிய அளவில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் மே 1-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வட்டத்தலைநகரங்களிலும்,புதுவையிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment