Friday, June 7, 2013

குண்டர் சட்டம் : பணம் பறிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை

குண்டர் சட்டம் : பணம் பறிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை

  மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா  மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் அறவழியில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களை குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களின் கீழ் தமிழக அரசு கைது செய்து வருகிறது.

   இதுவரை குண்டர் சட்டத்தில் 77 பேர், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 27 பேர் என மொத்தம் 104 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சுதந்திர இந்தியாவில், இரண்டே வாரங்களில் ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 104 பேரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தக் கொடுமை இதுவரை நடந்ததில்லை.  பல இடங்களில் பா.ம.க.வினரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, ‘‘நீங்கள் பணம் தராவிட்டால் உங்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து, அதன் அடிப்படையில் உங்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துவிடுவோம்’’ என்று மிரட்டி ரூ.50 ஆயிரம் வரை காவல்துறையினர் பணம் பறித்து வருகின்றனர் என்று  ஏற்கனவே குற்றஞ்சாற்றியிருந்தேன். இதற்குப் பிறகும்  இந்த சட்டவிரோத செயல்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை.

  மாறாக, பணம் தராவிட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்போம் என்று காவல்துறையினர் மிரட்டுவதும், பணம் பறிப்பதும் அதிகரித்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திப்பம்பட்டியில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த குமரேசன், சரவணன் ஆகிய சகோதரர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அத்துடன் நிற்காமல் கடந்த சில நாட்களுக்கு முன் அவர்களின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவர்களின் மற்றொரு சகோதரரான கார்த்திக்கையும், அவரது உறவினரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கப் போவதாகவும், இதை தடுக்க வேண்டுமானால் இருவரும் தலா ஒரு லட்சம் வீதம் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன கார்த்திக்கும் அவரது குடும்பத்தினரும் தங்கள் குடும்ப நகைகளை அரூரில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.மேலும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இரு சக்கர ஊர்தி ஒன்றையும் காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி இன்னும் ஒரு லட்ச ரூபாய் பணம் தர வேண்டுமென்று கேட்டு இரவு நேரத்தில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள பொருட்களை சோதனையிடுவது, பெண்களிடன் அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஊத்தங்கரை காவல்நிலைய ஆய்வாளர் சிவலிங்கம், சார்பு ஆய்வாளர் அண்ணாமலை, தலைமைக் காவலர் சேட்டு, நுண்ணறிவுப்பிரிவு காவலர் சுப்பிரமணி, காவல் ஆய்வாளரின் ஓட்டுனர் சரவணன் ஆகியோர் தான் இத்தகைய அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து, கொள்ளை & வழிப்பறி போன்ற செயல்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே,  பா.ம.க.வினரின் வீடுகளுக்குள் புகுந்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்போவதாக மிரட்டி பணம் பறிப்பது கடுமையாக கண்டிக்கத் தக்கது. வடமாவட்டங்களில் குண்டர் சட்டத்தைக் காட்டி மிரட்டி வன்னிய சமுதாய மக்களிடம் பணம் பறிப்பதை காவல்துறையினர் ஒரு வணிகமாகவே கொண்டிருக்கின்றனர். வன்னியர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள் உச்சகட்டத்தை அடைந்திருப்பதையும், ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டிருப்பதையுமே இது காட்டுகிறது. குண்டர் சட்ட கைது போன்ற அடக்குமுறைகளை கைவிடுவதுடன், அதைக்காட்டிமிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை தலைமை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் காவல்துறை மீதான கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் பொதுமக்கள் இழந்து விடுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

No comments:

Post a Comment