Thursday, May 23, 2013

மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி கிடைக்க ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முடிவு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி கிடைக்க ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முடிவு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி கிடைப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க பா.ம.க. தலைமை முடிவு செய்துள்ளது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது:–பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கடந்த 20–ந்தேதி இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நலமாக இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து, பொதுவார்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். 5 அல்லது 6 நாட்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

ரூ.3 லட்சம் உதவி

இதுதொடர்பாக மரக்காணம் கலவரத்தையொட்டி இறந்தவர்கள் குடும்பத்துக்கு பா.ம.க. சார்பில் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். ஆனால் அப்போது அரியானா மாநிலத்தைச்சேர்ந்த ஓட்டுனர் ஒருவர் இறந்ததற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடுவழங்கியது. மாறாக கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்கவில்லை.இந்த கலவரம் தொடர்பாக பா.ம.க.வைச் சேர்ந்த 95 பேர் அதாவது, 71 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், 24 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த குற்றமும் செய்யாதவர்கள். இதில் வக்கீல்கள், இளைஞர்கள் மற்றும் பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய குழு பொறுப்பாளர்களும் அடங்குவார்கள்.

கோர்ட்டுக்கு செல்ல முடிவு

ஒரே நாளில், ஒரேகட்சியை சேர்ந்த அதுவும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்திருப்பது இந்தியாவிலேயே எங்கும் நடக்கவில்லை. நெருக்கடி காலங்களில் 80 பேர் தான் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டை கண்டித்தும், நீதி கிடைப்பதற்காக கோர்ட்டுக்கு செல்வதுடன், டெல்லியில் உள்ள மனிதஉரிமை ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், பிரதமர், ஜனாதிபதியை சந்தித்தும் எங்கள் தரப்பு நியாயங்களை தெரிவிக்க உள்ளோம்.

நலம் விசாரித்த தலைவர்கள்

மரக்காணம் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி, உண்மையை கூறட்டும். டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் பெறப்பட்ட சிகிச்சை குறித்து உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ்யாதவ், புதுச்சேரி முதல்–அமைச்சர் ரெங்கசாமி, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் உட்பட பலர் நலம் விசாரித்தனர். அதேபோல் தான் தி.மு.க. தலைவரும் நலம் விசாரித்து உள்ளார். மற்றபடி தி.மு.க.வுடன் கூட்டணி என்பது எல்லாம் இல்லை.ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் அறிவித்தப்படி, வரும் பாராளுமன்ற தேர்தல், அதனை தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தல் உட்பட எதிர்காலத்தில் வரும் எந்த தேர்தலிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். மாறாக வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment