Tuesday, May 21, 2013

மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி - பா.ம.க அன்புமணி இராமதாசு அறிக்கை

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை -
மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்திற்கு  ரூ. 3 லட்சம் நிதி:
  மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்கச் சென்றவர்கள் மீது மரக்காணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் மற்றும் கலவரத்தில் அரியலூர் செல்வராஜ், கும்பகோணம் விவேக் ஆகிய இரண்டு  அப்பாவி வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
 
  மரக்காணம் கலவரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் திட்டமிட்டு நடத்தினார்கள் என்ற போதிலும், இதற்காக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  மாறாக நீதி கேட்டு போராடிய  மருத்துவர் அய்யா அவர்களையும், கட்சியின் மற்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
 
  அடுத்தகட்டமாக , கட்சியின் நிர்வாகிகளையும், முன்னணி செயல்வீரர்களையும் குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 89 பேர் ஒரே வாரத்தில் அடக்குமுறை சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறையாகும். பாட்டாளி மக்கள் கட்சியை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுவரும்  இந்த வரலாறு காணாத அடக்குமுறையை நாங்கள் எதிர்கொள்வோம். அதுமட்டுமின்றி மரக்காணம் கலவரத்திலும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு உதவிகளை வழங்க கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறது.
 
  அதன்படி மரக்காணம் கலவரத்தில், விடுதலைசிறுத்தைகளால் கொல்லப்பட்ட அப்பாவி வன்னியர்கள் அரியலூர் செல்வராஜ், கும்பகோணம் விவேக் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அதேபோல் மருத்துவர் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தீக்குளித்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொண்டர் பாண்டியனின் குடும்பத்திற்கும் ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
 
   அதுமட்டுமின்றி, அ.தி.மு.க. அரசால் பழி வாங்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 89 பேர் இதுவரை குண்டர் சட்டத்திலும், தேசியப்பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை செய்யப்படும் வரை இவர்களின் குடும்பத்திற்கான நிதி மற்றும் பொருள் உதவிகளை கட்சி வழங்கும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சட்ட உதவி வழங்குதல் மற்றும் அதற்கான அனைத்துச் செலவுகளையும் பாட்டாளி மக்கள் கட்சியே ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment